நடிகர் அஜித், நடிகராக மட்டுமல்ல, பைக் மற்றும் கார் ஓட்டுவதிலும் ஆர்வம் கொண்டவர் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். அஜித்குமார் ரேஸிங் என்கிற பெயரில் கார் ரேஸ் அணியை தொடங்கி, தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெற இருக்கும் கார் ரேஸின் பயிற்சிக்காக, அஜித் கடந்த சில நாட்களுக்கு துபாய்க்கு பயணித்தார்.
அவர் பயிற்சியில் ஈடுபட்டபோது, கார் ஓட்டிக் கொண்டிருந்த போது, கார் டிராக் ஓரமாக வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியது. இந்த விபத்தால் காரின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தாலும், அஜித் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
விபத்து குறித்து, அஜித் ரேஸிங் அணி வீரர் பேபியன் டுபியக்ஸ் அஜித்தின் நிலையை விளக்கி கூறினார், "அஜித் சிறு காயங்கள் கூட இன்றி நலமாக இருக்கிறார். இடையூறுகள் எதுவாக இருந்தாலும் ரேஸிங் மீதான எங்களின் ஆர்வம் ஒவ்வொரு அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ளவும், தொடர்ந்து முன்னேறவும் எங்களை தூண்டுகிறது. இந்த பாதை பாடங்கள் நிறைந்தது. அதை ஒரு அணியாகவும், குடும்பமாகவும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்" என்றார் .





