கர்நாடக மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை கதர் ஆடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கதர் பயன்பாட்டை ஊக்குவித்து, பாரம்பரிய இந்திய துணி உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் விதான சௌதாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த உத்தரவு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அரசு தலைமை செயலாளர் ஷாலினி ரஜினீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல துறை அதிகாரிகள் மற்றும் கர்நாடக அரசு ஊழியர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கதர் ஆடைகளின் பயன்பாட்டை அதிகரித்து, காதி மற்றும் கிராமிய தொழில்களை ஆதரிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் முன்மாதிரியாக செயல்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் சடாக்ஷரி குரி, அரசு எடுத்துள்ள இந்த முடிவை சங்கம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். கதர் ஆடை அணிவது தேசிய பாரம்பரியத்தையும், சுதந்திரப் போராட்டத்தின் அடையாளத்தையும் நினைவுபடுத்தும் செயல் என்பதால், ஊழியர்கள் இதனை நேர்மறையாக அணுக வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அரசின் உத்தரவின்படி, அரசு ஊழியர்கள் கதர் ஆடைகளை அரசு நடத்தும் காதி மற்றும் கிராமிய தொழில் கடைகளில் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் நெசவாளர்கள் மற்றும் கிராமிய தொழிலாளர்களின் வருமானம் உயர்வதுடன், கதர் உற்பத்திக்கும் புதிய ஊக்கமளிக்கும் என அரசு நம்புகிறது.
மேலும், அரசு காதி கடைகளில் வாங்கப்படும் கதர் ஆடைகளுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி மூலம் அரசு ஊழியர்கள் கதர் ஆடைகளை எளிதாகவும், குறைந்த செலவிலும் வாங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தள்ளுபடி விவரங்கள் மற்றும் அமல்படுத்தும் நடைமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக அரசு முன்பு பல்வேறு திட்டங்கள் மூலம் கதர் மற்றும் கைநெசவுத் துறையை ஊக்குவித்து வந்த நிலையில், தற்போது அரசு ஊழியர்களுக்கான இந்த கட்டாய உத்தரவு மூலம் கதர் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனால், காதி மற்றும் கிராமிய தொழில் வளர்ச்சி பெறும் என்றும், மாநிலத்தின் பாரம்பரிய தொழில்கள் பாதுகாக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த உத்தரவு விரைவில் அனைத்து அரசு துறைகளுக்கும் அறிவிக்கப்படும் என்றும், மாதந்தோறும் முதல் சனிக்கிழமை கதர் ஆடை அணிவது கட்டாயமாக நடைமுறைக்கு வரும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.





