இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் மேலும் ஒரு முக்கிய கட்டமாக PSLV-C62 ராக்கெட் இன்று காலை 10.17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படுகிறது. இந்த ஏவுதல் மூலம் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் அறிவியல் ஆய்வுகளுக்காக மொத்தம் 16 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகின்றன.
இந்த பயணத்தின் முதன்மை செயற்கைக்கோளாக DRDO தயாரித்த EOS-N1 செயற்கைக்கோள் இடம்பெறுகிறது. இது ஒரு மேம்பட்ட ஹைபர் ஸ்பெக்ட்ரம் சென்சார் கொண்ட செயற்கைக்கோளாகும். இதன் மூலம் பூமியின் மேற்பரப்பு மாற்றங்கள், காடுகளின் அடர்த்தி, நிலத்தடியில் மறைந்திருக்கும் வளங்கள் உள்ளிட்ட பல தகவல்களை மிகத் துல்லியமாக கண்காணிக்க முடியும். மலைப்பகுதிகள், காடுகள் மற்றும் பாலைவனங்களில் மறைந்திருக்கும் பயங்கரவாத முகாம்கள் அல்லது சந்தேகத்திற்குரிய நகர்வுகளை கண்டறியவும் இந்த செயற்கைக்கோள் உதவியாக இருக்கும்.
விவசாயத்துறைக்கும் EOS-N1 முக்கிய பங்களிப்பு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்களின் ஆரோக்கிய நிலை, நீர்ப்பற்றாக்குறை, வறட்சி அபாயம் ஆகியவற்றை முன்கூட்டியே கணித்து விவசாயிகளுக்கு எச்சரிக்கை வழங்கும் திறன் இந்த செயற்கைக்கோளுக்கு உள்ளது. மேலும் புயல், காட்டுத் தீ போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கண்டறிந்து நிர்வாக அமைப்புகளுக்கு தகவல் வழங்கவும் இது பயன்படும்.
இந்த ஏவுதலில் EOS-N1 உடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 15 சிறிய செயற்கைக்கோள்களும் இணைந்து விண்ணில் செலுத்தப்படுகின்றன. இதில் சில ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்களும் இடம்பெறுகின்றன. குறிப்பாக சென்னை சார்ந்த ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் தயாரித்த செயற்கைக்கோள், புவிவட்டப்பாதையில் சுற்றிவரும் செயற்கைக்கோள்களுக்கு மீண்டும் எரிபொருள் நிரப்புதல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.
மேலும் ஸ்பைன் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் உருவாக்கிய ‘கிட்’ எனப்படும் சிறிய விண்கலமும் இந்த பயணத்தில் அனுப்பப்படுகிறது. இந்த விண்கலம் பூமிக்கு மீண்டும் பாதுகாப்பாக திரும்பும் தொழில்நுட்ப சோதனைக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இது எதிர்கால விண்வெளி ஆய்வுகளுக்கு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
PSLV-C62 ராக்கெட், பூமியில் இருந்து சுமார் 505 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் EOS-N1 செயற்கைக்கோளை நிலைநிறுத்தவுள்ளது. இந்த ஏவுதலுக்கான 22.3 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் விண்வெளி திறனை மேலும் உறுதிப்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்த ஏவுதல் பார்க்கப்படுகிறது.





