சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக கிருஷ்ணா நதி நீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ஆந்திரப் பிரதேசம் தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீரை வழங்கி வருகிறது. ஒப்பந்தத்தின் படி ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி மற்றும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என மொத்தம் 12 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.
தற்போது கோடைகாலம் நிலவுவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், இரண்டாம் கட்டமாக வழங்க வேண்டிய கிருஷ்ணா நதி நீரை திறந்துவிடுமாறு தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர மாநில அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர அரசு விநாடிக்கு 1900 கனஅடி அளவில் கிருஷ்ணா நதி நீரை கால்வாயில் திறந்துவிட்டது. இந்த நீர் சுமார் 152 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து இன்று திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகிலுள்ள ஜீரோ பாயிண்ட் என்ற தமிழக எல்லைப் பகுதிக்கு வந்தடைந்தது.
இந்த நீர் இன்று மாலை பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து பூண்டி, புழல், சோழவரம், கண்ணங்கோட்டை மற்றும் தேர்வாய் கண்டிகை உள்ளிட்ட முக்கிய ஏரிகளில் சேமித்து வைக்கப்பட்டு, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 4 டிஎம்சி நீரில் இதுவரை 1.09 டிஎம்சி நீர் கிடைத்துள்ளதாகவும், மேலும் 2.81 டிஎம்சி நீர் கிடைக்க வேண்டியுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணங்கோட்டை ஆகிய ஐந்து ஏரிகளிலும் தற்போது மொத்த கொள்ளளவின் 51.11 சதவீத நீர் மட்டுமே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.57 டிஎம்சி ஆகும் நிலையில், தற்போது சுமார் 6.715 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.
ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு குடிநீர் வரும்போது பொதுவாக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளிப்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இந்த முறை புதிய நீர்வரத்து தொடங்கியிருந்த போதிலும் அதிகாரிகளோ அல்லது மக்கள் பிரதிநிதிகளோ வருகை தராதது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரித்துள்ளதால், வரும் நாட்களில் சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு ஓரளவு குறையும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


