பழனியில், பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பழனி குட் லயன்ஸ் கிளப், ஆப்பிள் ட்ரி காட்டேஜ், கோரா என்டர்டெயின்மென்ட், மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து இந்த முகாமை ஏற்பாடு செய்தன. இது பழனி புது தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள ஏ.வி.எம். மஹாலில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.
இந்த முகாமில் 134 பேர் கண் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு முறையாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. பலருக்கும் பரிந்துரைப்பட்ட மருத்துவ உதவிகள், மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் 18 பேர் மேல் சிகிச்சைக்காக மற்றும் கண் அறுவை சிகிச்சைக்கு மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டதோடு, சிறப்பான சிகிச்சை முகாமின் ஏற்பாடுகளை மகிழ்ச்சியுடன் அனைவரும் பாராட்டினர். இந்நிகழ்வின் மிக முக்கிய ஏற்பாடுகளை குட் லயன்ஸ் கிளப் நிறுவனர் எஸ். அப்துல் சலாம் மேற்கொண்டிருந்தார்.
முகாமின் இறுதியில், மதியம் 12 மணியளவில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார் நிகழ்வில் கலந்து கொண்டு பங்கேற்றவர்களை நலம் விசாரித்து, அவர்களுடன் உரையாடினார். முகாமில் பங்கேற்ற அனைவரும் சிகிச்சை பெறுவதில் மன நிறைவடைந்ததை வெளிப்படுத்தினர்.





