சென்னிமலை மலை மேலுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் 2025 ஆம் ஆண்டுக்கான தைப்பூச விழா பிப்ரவரி 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, தேர் முகூர்த்தக்கால் நிகழ்வு நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவிற்காக கைலாசநாதர் கோவிலில் கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்யாகவாசகம் மற்றும் பஞ்சகவ்ய பூஜை நடைபெற்றது. பின்னர் முருகப்பெருமான் வேலுக்கு சிறப்பு பூஜை மற்றும் கைலாசநாதர், அம்பாளுக்கு விசேஷ பூஜைகள் நடந்தன.
தயார் செய்யப்பட்ட முகூர்த்தக்காலுக்கு பூஜை முடிந்தவுடன், தைப்பூச திருவிழா மக்களுக்கு அறிவிக்க நான்கு ராஜவீதிகளிலும் முருகப்பெருமானின் வேலை கொண்டு ஊர்வலம் நடைபெற்றது. மேளதாளம் முழங்க நடந்த இந்த ஊர்வலம் பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தேரோட்ட பணிகளில் ஈடுபடவுள்ள தொழிலாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு கோவில் தலைமை குருக்கள் பரிசுப்பொருட்களாக தேங்காய், பழம், அச்சு வெல்லம், விரளி மஞ்சள் உள்ளிட்டவை வழங்கினார்.





