மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள போக்குவரத்து பணிமனை அருகே, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் மாபெரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், "யார் அந்த சார்?" ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், திமுக அரசின் செயல்களை எதிர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வில் பேசிய அவர், திமுக அரசின் கீழ் பெண்கள் மற்றும் மாணவிகள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் குற்றவாளி எவ்வாறு நுழைய முடிந்தது? மாணவி மீது பாலியல் வன்கொடுமை நடந்தபோதும், குற்றவாளியை முழுமையாக விசாரணை செய்யாத அரசின் செயல்கள் கேள்விக்குறியாக உள்ளன எனவும் அவர் கூறினார்.
மக்களுக்கு பாதுகாப்பும் வளமும் வழங்கும் ஒரே வழி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்பதே என்றும், திமுக அரசின் கீழ் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். "இந்தத் தைத்திருநாளில் மக்கள் எதிர்பார்ப்பது உறுதியான வழிகாட்டலை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் மட்டுமே ‘யார் அந்த சார்?’ என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்," என்று அவர் தெரிவித்தார்.
அதிமுகவின் இந்த பிரச்சாரம் கிராமம் தோறும், நகரம் தோறும் மக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியாக மாறியுள்ளது. நிகழ்ச்சியின் முடிவில், முன்னாள் அமைச்சர் அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.





