மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து ஊராட்சிக்குட்பட்ட சடையாள் பகுதியில், உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மற்றும் டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள் நாட்டு நலப்பணிகள் திட்டத்தின் கீழ் முகாமிட்டுள்ளனர். இவர்கள் சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முகாமின் தொடக்க நாளில், நாட்டு நலப்பணிகள் திட்ட தொடர்பு அலுவலர்கள் ராஜ்குமார் மற்றும் நவநீத கிருஷ்ணன், சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வின் போது, நெகிழி பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி தனது சொந்த செலவில் 5 ஆயிரம் மஞ்சள் பைகளை வழங்கி, அவற்றை மாணவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நெகிழி பயன்பாட்டை குறைக்கும் இந்த முயற்சிக்காக அஜித்பாண்டி மீது பலரின் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.





