நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட 'அரிசன் காலனி' ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பெயர் மாற்றப்பட்டது. ஊர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளி பெயரை 'மல்லசமுத்திரம் கிழக்கு' என மாற்றியதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று மல்லசமுத்திரம் கிராமத்திற்கு நேரடியாக சென்று, 'அரிசன் காலனி' என்ற பெயர்ப்பலகையை மாற்றி, புதிய பெயர் கொண்ட அரசாணையை பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினார். மேலும், மக்களின் கோரிக்கையை அரசிடம் எடுத்துச் சென்ற ஊர் பெரியர் கணேசனுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
அரசாணை வெளியிடுவதற்கான உத்தரவை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கியதாகவும், கல்வி சமத்துவத்தை ஏற்படுத்தும் மிகப்பெரிய ஆயுதம் என்ற அவரது கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதன் மூலம் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது.





