தமிழகத்தின் இயற்கை வளம் நிறைந்த பகுதிகளில் ஒன்றாக விளங்கும் கொல்லிமலை, தற்போது அதன் பழங்குடியினர் சந்தை மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையின் நுழைவு பகுதியில் அமைந்துள்ள இந்த சந்தை, முழுக்க முழுக்க பழங்குடியின விவசாயிகளால் நடத்தப்படுகிறது. சுமார் 16 கடைகளுடன் செயல்படும் இந்த சந்தையில், கொல்லிமலையில் விளையும் விளைப்பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த சந்தையின் முக்கிய சிறப்பம்சம், இங்கு கிடைக்கும் அனைத்து பொருட்களும் ரசாயன உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் இன்றி விளைவிக்கப்படுவதாகும். கொல்லிமலையில் பெரும்பாலும் மழையை நம்பிய விவசாயமே நடைமுறையில் உள்ளது. நவீன விவசாய முறைகள் இங்கு அதிகமாக பயன்படுத்தப்படுவதில்லை. அதனால், பாரம்பரிய விவசாயமே இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது.
சந்தையில் மலைதேன், கொம்புத்தேன், மா, பலா, கொய்யா, செவ்வாழை, மலைவாழை, அன்னாசி, எலுமிச்சை, மலை ஆரஞ்சு, நெல்லி, இஞ்சி, காட்டுகத்தரி, புளி, மிளகாய், வல்லாரை, புதினா மற்றும் பல்வேறு மூலிகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக கொல்லிமலையில் விளையும் அன்னாசி, பல்வேறு வகைகளில் கிடைப்பதால் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
பலா வகைகளிலும் நாட்டுச் சேத்தா, ராமர் சேத்தா, முள் சேத்தா உள்ளிட்ட பாரம்பரிய வகைகள் கிடைக்கின்றன. மேலும், மலைவாழை, நேந்திரம் பழம், சீதாப்பழம், ஆரஞ்சு போன்ற பழங்களும் இங்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு பழமும் தனித்துவமான சுவை மற்றும் மருத்துவக் குணங்களை கொண்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சந்தை கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் முக்கிய இடமாக மாறியுள்ளது. இயற்கை விவசாய விளைப்பொருட்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்கும் வாய்ப்பு கிடைப்பதால், சுற்றுலா பயணிகள் இந்த சந்தையை தவறாமல் பார்வையிடுகின்றனர். பலர் இந்த சந்தையை கொல்லிமலை பயணத்தின் ஒரு முக்கிய அனுபவமாக கருதுகின்றனர்.
பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த சந்தை செயல்பட்டு வருகிறது. இடைத்தரகர்கள் இன்றி நேரடி விற்பனை நடைபெறுவதால், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதாகவும், மக்களுக்கும் தரமான இயற்கை உணவுப்பொருட்கள் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், கொல்லிமலை பழங்குடியினர் சந்தை ஒரு முன்மாதிரி சந்தையாக உருவெடுத்து வருகிறது.





