பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கூடலூர் மற்றும் கூத்தூர் கிராமங்களுக்கு இடையே ஓடும் மருதையாற்றின் காரணமாக, மாணவ-மாணவியர் மற்றும் பொதுமக்கள் தினசரி கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இடுப்பளவு தண்ணீரில் ஆற்றை கடந்து, ஒருவரை ஒருவர் கைகோர்த்து பிடித்தபடி கூத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆற்றில் தண்ணீர் இல்லாத நாட்களில் மக்கள் நடந்தும், இருசக்கர வாகனங்களின் மூலம் ஆற்றுப் படுகையை கடந்து செல்வதுடன், தண்ணீர் அதிகரிக்கும் காலங்களில் 7 கி.மீ. தொலைவு கொண்ட இலுப்பைக்குடி மற்றும் பிலிமிசை வழியாகச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
இத்தகைய கடுமையான பிரச்சனையை தீர்க்க, மருதையாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கை மீதான நடவடிக்கை இன்றுவரை எடுக்கப்படாததால், மக்கள் மற்றும் மாணவர்களின் அவல நிலை தொடர்ந்து வருகிறது. அரசு உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





