தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அளவிலான முதலாவது பாரா தடகள போட்டிகள் தருவை விளையாட்டு மைதானத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான பி. கீதாஜீவன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் இருந்தார்.
இந்த விளையாட்டு விழாவில் பார்வையற்றவர்கள், அறிவுசார் குறைபாடு உள்ளவர்கள், உயரம் குறைந்தவர்கள், உடல் உறுப்புகளில் பாதிப்பு உள்ளவர்கள் உள்ளிட்ட பல்வேறு மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். மொத்தமாக 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், 30க்கும் அதிக பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், ஈட்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தமிழ்நாடு மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஆண்டனி அதிர்ஷ்டராஜ், உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன், தடகள பயிற்சியாளர் ரஞ்சித் குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மதுரை பகுதி நிர்வாகி பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்கத்தின் தலைவர் டாக்டர் முகமது நசீர், செயலாளர் ஸ்டீபன், பொருளாளர் நீல்ராஜன், துணைத் தலைவர்கள் கிறிஸ்டோபர் விஜயராஜ் மற்றும் கான்ஸ்டன், துணைச் செயலாளர் ஜெயலட்சுமி, செயற்குழு உறுப்பினர்கள் ரிகானா பர்வீன் மற்றும் நாகேஸ்வரி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு அனைத்து பிரிவினரும் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டு மாற்றுத்திறனாளிகளின் திறமையை ஊக்குவிக்கும் முக்கியமான முயற்சியாக அமைந்தது.





