தூத்துக்குடி மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் நடைபெறும் அரசு சேவைகள் ஒருங்கிணைந்த முகாம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த இந்த திட்டத்தின் நோக்கம், மக்கள் தேவைகளை ஒரே இடத்தில் நிறைவேற்றும் வகையில் பல்வேறு துறை சேவைகளை ஒருங்கிணைத்து வழங்குவதாகும்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி நகரின் 40வது, 46வது மற்றும் 47வது வார்டுகளை உள்ளடக்கிய சிறப்பு முகாம், காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முகாமின் போது மொத்தமாக 1991 பொதுமக்கள் மனுக்கள் பெறப்பட்டன. இதில் 1299 மனுக்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு தொடர்புடையவை. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு 191 மனுக்கள், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு 164 மனுக்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 80 மனுக்கள், எரிசக்தி துறைக்கு 69 மனுக்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 72 மனுக்கள் என பல்வேறு துறைகளில் மனுக்கள் பெறப்பட்டன.
முகாமின் போது, பொதுமக்கள் நேரில் தங்கள் கோரிக்கைகளை அளிக்கக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டது. அலுவலர்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து விவரங்களை பதிவு செய்தனர். இவ்வாறு பெறப்பட்ட மனுக்களை துறை வாரியாக பகுத்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் உறுதியளித்தார்.
இந்த முகாமில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, கவுன்சிலர் ரெக்சிலின், மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மகளிர் அணி கமலி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இத்தகைய முகாம்கள் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மக்களின் தேவைகளை நேரடியாக புரிந்து கொள்ளும் இந்த முயற்சி, அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் நேரடியாக சென்றடைய உதவியாக அமைந்துள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மக்கள் நலனில் மிக முக்கிய பங்காற்றுவதாக அமைந்துள்ளது.





