ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது மட்டுமல்ல, பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்ற வரலாறும் கொண்டது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் இந்த கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த விழாவின் முக்கியமான நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு, பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளிய விரஜாநதி மண்டபத்தில் நடந்தது. அதன் பின்னர், காலை 5.15 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள், பாண்டியன் கொண்டை, கிளிமாலை மற்றும் ரத்தின அங்கி அலங்காரத்தில் பரமபத வாசலை கடந்து எழுந்தருளினார். பக்தர்கள் லட்சக்கணக்கானோர், "ரங்கா.. ரங்கா.." கோஷம் எழுப்பி, பெருமாளை பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
இந்த சொர்க்கவாசல் 8 நாட்கள் திறந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. காலையில் 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்படும் இந்த சொர்க்கவாசல், 7-வது திருநாளான 16-ந்தேதி மாலை 4 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறக்கப்படும். 9-வது திருநாளான 18-ந்தேதி பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை மற்றும் 10-வது திருநாளான 19-ந்தேதி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்படும்.
இதோடு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலிலும் பரமபத வாசல் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பிற வைணவத் தலங்களிலும் இதேபோல் பரமபத வாசல்கள் திறக்கப்பட்டன. திரளான பக்தர்கள் அதிகாலை நேரத்தில் கோவில்களுக்கு வருகை தந்ததால், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.





