தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நெருங்கிவருவதையடுத்து நாமக்கல் மாவட்டம் பரமதி வேலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வெல்லம் உற்பத்தி மற்றும் விற்பனை களைகட்டியுள்ளது. காவிரி ஆற்றின் பாசனத்தை நம்பி பரமதி வேலூர், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக காவிரி கரையோர கிராமங்களில் கரும்பு அதிகளவில் பயிரிடப்படுவதால் வெல்லம் உற்பத்தி முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.
பரமதி வேலூர், பிளிக்கல் பாளையம், ஜேனர் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கரும்பு சாறு பிழிந்து பாரம்பரிய முறையில் வெல்லம் தயாரிக்கப்படுகிறது. உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் போன்ற பல்வேறு வகைகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை காரணமாக வெல்லத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மட்டுமின்றி சேலம், திருச்சி, சென்னை மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் வியாபாரிகள் பரமதி வேலூருக்கு வந்து வெல்லம் வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக பிளிக்கல் பாளையத்தில் நடைபெறும் வெல்லம் ஏலத்தில் வெளிமாவட்ட வியாபாரிகள் அதிகளவில் பங்கேற்று வருகின்றனர்.
தற்போது 30 கிலோ எடையுள்ள உருண்டை வெல்லம் சிப்பம் ரூ.1490க்கும், அச்சு வெல்லம் ரூ.1370க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விலை சற்று மேம்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரசாயன கலப்பில்லாத பாரம்பரிய வெல்லத்திற்கு சந்தையில் நல்ல மதிப்பு கிடைப்பதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். கரும்பு விளைச்சல் சீராக இருப்பதும், பொங்கல் பண்டிகை தேவை அதிகரித்திருப்பதும் வெல்லம் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு பொங்கல் பருவத்தில் வெல்லம் உற்பத்தி மற்றும் விற்பனை சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.





