தர்மபுரி மாவட்டம் செங்கல் மேடு அருகில் அமைந்துள்ள மூலக்காடு ஸ்ரீ தண்டு போத்தன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் தொடக்க நிகழ்வாக நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. இன்று காலை கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
விழாவின் முக்கிய பகுதியாக, கோபூஜை, தீர்த்தக்குடம், பால்குடம், மற்றும் முளைப்பாறை வைத்து பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பெண்கள் பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு, வானவேடிக்கைகளுடன் பம்பாய் வாத்திய ஒலியுடன் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தடைந்தனர்.
மாலையில் மங்கள இசை முழங்க, வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், சாலை பூஜை, அக்னிகார்யம், மூலமந்திர ஹோமம், திரவிய ஹோமம் மற்றும் உபசார பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. வரும் பத்தாம் தேதி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, நாடிசந்தானம், மஹா பூர்ணாஹுதி போன்றவை நடைபெறும்.
காலை 9 முதல் 10 மணிக்குள் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்படுவதுடன், விமான கோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு, ஸ்ரீ தண்டு போத்தன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதில் அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமியின் அருளைப் பெற கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. விழாவை முன்னிட்டு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு இறையருளைப் பெறலாம்.





