சென்னை, ஜூன் 5
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, புதிய அரசியல் பயணத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார். இன்று மதியம் சமூக வலைதளத்தின் மூலம் வெளியிட்ட உரையில், "We The Leaders" என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
தனது உரையின் போது, கடந்த சில மாதங்களாக அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான பல்வேறு விவகாரங்கள் குறித்து சிந்தித்து வந்ததாக அண்ணாமலை கூறினார். இதன் தொடர்ச்சியாக புதிய அரசியல் தளத்தை உருவாக்கும் முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பாரதிய ஜனதா கட்சியுடனான தனது அரசியல் பயணம் 2020ஆம் ஆண்டு தொடங்கியதாகவும், அப்போது தேசிய தலைமையின் அழைப்பை ஏற்று கட்சியில் இணைந்ததாகவும் நினைவுகூர்ந்தார். கட்சியில் இணைந்த பிறகு பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், குறிப்பாக தமிழக பாஜக தலைவராக செயல்பட்ட காலம் தனது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான கட்டமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அண்ணாமலை தனது உரையில், கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடுகள் இருந்ததை ஒப்புக்கொண்டார். இருப்பினும், அந்த வேறுபாடுகள் தனிப்பட்டவை அல்ல என்றும், அரசியல் அணுகுமுறைகள் தொடர்பானவை என்றும் தெரிவித்தார்.
புதிய இயக்கம் குறித்து பேசிய அவர், இளைஞர்கள், தொழில்முனைவோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படும் மக்கள் மைய அரசியல் தளமாக "We The Leader" உருவாக்கப்படும் என்றார். மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் நிர்வாக மாற்றங்களை முன்னிறுத்தும் நோக்கத்துடன் இந்த இயக்கம் செயல்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் பல்வேறு தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்புகள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் அவர் நினைவுகூர்ந்தார். அரசியல் களத்தில் நுழைவதற்கு முன்பு கிடைத்த பல்வேறு வாய்ப்புகள் குறித்து குறிப்பிட்ட அவர், இறுதியில் பாஜகவை தேர்வு செய்ததாக தெரிவித்தார்.
அண்ணாமலையின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய இயக்கம் அரசியல் கட்சியாக மாறுமா அல்லது மக்கள் இயக்கமாக செயல்படுமா என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அவரது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் புதிய இயக்கத்தின் அமைப்பு குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

