மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள மொக்கத்தான்பாறை கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் குறைந்த வசதிகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மலை பகுதிகளில் தேன், கிழங்கு மற்றும் மூலிகைப் பொருட்களை சேகரித்து விற்பனை செய்வதன் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். எனினும், குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் வேலைக்கு செல்வதால், அவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல், கல்வியில் பாதிப்படைந்தனர்.
இந்த பிரச்சினையை உணர்ந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, 3 மாதங்களுக்கு முன்பு கிராமத்திற்கு நேரடியாக வருகை தந்து ஆய்வு செய்தார். அப்போது, மலைவாழ் மக்களின் குழந்தைகளை பள்ளிக்குச் செல்லச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலாக, கிராம மக்கள், அடிப்படை வசதிகள் இல்லாததையும், வீடுகள் சேதமடைந்த நிலையில் இருப்பதால் மழைக் காலத்தில் வீடுகளுக்குள் இருக்க முடியாத நிலை உள்ளதையும் தெரிவித்தனர். அவர்கள், மாவட்ட ஆட்சியரிடம் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர், விரைவில் அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதற்கிடையில், குழந்தைகளை பள்ளிக்குச் செல்லச் செய்வது அவசியம் என்றும் அன்புடன் அறிவுறுத்தினார்.
இதற்கமைய, முதல் கட்டமாக, மாவட்ட பழங்குடியினர் நல திட்டத்தின் கீழ், தலா ₹4.34 லட்சம் மதிப்பீட்டில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்பின் உதவியுடன் சுமார் ₹6 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. முழுமையான வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த 10 புதிய வீடுகள் விரைவில் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட உள்ளன. மேலும், இக்கிராமத்தில் பள்ளி மற்றும் சாலை வசதிகளும் மேம்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் நெகிழ்ச்சியடைந்த மலைவாழ் மக்கள், மாவட்ட மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல வசதியாக பேருந்து சேவை ஏற்படுத்தி தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலம்பட்டி செய்தியாளர் வீரசேகரன்





