க்ரோஸ் ஐலெட்டில் நடந்த வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டியில், இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் தொடரையும் கைப்பற்றியுள்ள இங்கிலாந்து 5 போட்டிகளைக் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்தது. அந்நாட்டின் கேப்டன் ரோவ்மன் பாவெல் சிறப்பாக விளையாடி 54 ரன்களையும், ஷெபார்ட் 30 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் சாகிப் மக்மூத் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 146 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து, தொடக்க ஆட்டக்காரர்களின் விரைவான விக்கெட் இழப்பால் 37 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்த அசாதாரண சூழலில் வில் ஜாக்ஸ் (32 ரன்) மற்றும் சாம் கர்ரன் (41 ரன்) ஜோடி இணைந்து இன்னிங்சை நிலைப்படுத்தினர். அதன்பின் லியாம் லிவிங்ஸ்டன் 39 ரன்கள் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.
இங்கிலாந்து 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. தொடரில் இங்கிலாந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இங்கிலாந்து அணி, 4-வது போட்டியை 17-ந்தேதி ஆட உள்ளது.





