°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
ரக்கூன் செய்த வைரல் அட்டகாசம்: விலங்குகள் காப்பகத்திற்கு ரூ.2.34 கோடி நிதி குவிந்தது
South America

ரக்கூன் செய்த வைரல் அட்டகாசம்: விலங்குகள் காப்பகத்திற்கு ரூ.2.34 கோடி நிதி குவிந்தது

0 views
Text Size:

வைரல் சம்பவத்தால் தொடங்கிய நிதி திரட்டும் முயற்சி இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் கவனம் பெற்றதைத் தொடர்ந்து, ஹனோவர் கவுண்டி விலங்குகள் பாதுகாப்பு மற்றும் காப்பகத்துக்காக 'டிராஷ்டு பாண்டா' என்ற பெயரில் நிதி திரட்டும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் மதுபானக் கடைக்குள் புகுந்து, அங்கிருந்த மதுபானப் பாட்டில்களை உடைத்து, பின்னர் கழிவறையில் மயங்கிக் கிடந்த ரக்கூன் ஒன்று இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றது. இந்த வினோதச் சம்பவம் தற்போது அப்பகுதி விலங்குகள் பாதுகாப்பு அமைப்புக்கு சுமார் 2.34 கோடி ரூபாய் நிதி கிடைக்க உதவியுள்ளது.

மதுபானக் கடைக்குள் புகுந்த ரக்கூன்

வர்ஜீனியா மாகாணத்தின் ஆஷ்லேண்ட் பகுதியில் உள்ள மதுபானக் கடையில் கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றது. கடை மூடப்பட்டிருந்த நேரத்தில், மேற்கூரைப் பகுதியில் இருந்த வழியாக ரக்கூன் ஒன்று உள்ளே புகுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடைக்குள் நுழைந்த அந்த விலங்கு, அங்கிருந்த மதுபானப் பாட்டில்களை கீழே தள்ளி உடைத்துள்ளது. இதனால் கடையின் தரையில் மதுபானம் சிதறிக் கிடந்தது. மேலும், கடையின் சில பொருட்களும் சீர்குலைந்திருந்தன. இந்தச் சம்பவத்தில் மொத்தம் 14 மதுபானப் பாட்டில்கள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மறுநாள் காலையில் கடையைத் திறக்க வந்த ஊழியர், கழிவறையில் ரக்கூன் ஒன்று மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக விலங்கு பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட ரக்கூன்

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த ஹனோவர் கவுண்டி விலங்குகள் பாதுகாப்பு அதிகாரி சமந்தா மார்ட்டின், அந்த ரக்கூனைப் பாதுகாப்பாக மீட்டார். பின்னர் அதை விலங்குகள் காப்பகத்துக்குக் கொண்டு சென்றார்.

அங்கு சில மணி நேரம் ஓய்வெடுத்த பிறகு ரக்கூன் இயல்பு நிலைக்குத் திரும்பியது. அதற்கு வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அந்த விலங்கு மீண்டும் காட்டுப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படங்களும் பதிவுகளும் வேகமாகப் பரவின. குறிப்பாக, கழிவறையில் மயங்கிக் கிடந்த ரக்கூனின் புகைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதனால் அந்த விலங்கு இணையத்தில் பேசுபொருளானது.

வைரல் சம்பவத்தால் தொடங்கிய நிதி திரட்டும் முயற்சி

இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் கவனம் பெற்றதைத் தொடர்ந்து, ஹனோவர் கவுண்டி விலங்குகள் பாதுகாப்பு மற்றும் காப்பகத்துக்காக 'டிராஷ்டு பாண்டா' என்ற பெயரில் நிதி திரட்டும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. ரக்கூனின் புகைப்படம் மற்றும் உருவத்தைப் பயன்படுத்தி டி-ஷர்ட்கள், காபி கோப்பைகள் உள்ளிட்ட நினைவுப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன.

இந்த முயற்சிக்கு பொதுமக்களிடமிருந்து எதிர்பாராத அளவுக்கு ஆதரவு கிடைத்தது. இதன் மூலம் மொத்தம் 2.34 கோடி ரூபாய்க்கு இணையான 2.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் திரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி விலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகளின் பணிகளுக்கும், காப்பகத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, விலங்குகள் மீதான கொடுமை தொடர்பான விசாரணைகளின்போது ஆதாரங்களைச் சேகரிக்கவும், அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உடலில் பொருத்தக்கூடிய கேமராக்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

விலங்குகள் காப்பகத்துக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகள்

திரட்டப்பட்ட நிதியின் ஒரு பகுதி விலங்குகளுக்கான புதிய தங்குமிடங்கள் அமைத்தல், விளையாட்டுப் பொருட்கள் வாங்குதல், உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான வெப்பநிலைக் கட்டுப்பாட்டு வசதியுடன் கூடிய கிடங்கு அமைத்தல் போன்ற பணிகளுக்கும் ஒதுக்கப்பட உள்ளது. மேலும், செல்லப்பிராணிகளுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கும் உதவும் வகையில் சமூக மற்றும் செல்லப்பிராணி உணவுப் பொருள் சேமிப்பு வசதியை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஹனோவர் கவுண்டி விலங்கு பாதுகாப்புப் பிரிவின் தலைமை அதிகாரி ஜெஃப்ரி பார்க்கர், இந்த நிதி திரட்டும் முயற்சிக்கு கிடைத்த வரவேற்பு வியப்பளிப்பதாகக் கூறியுள்ளார். நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்டு வந்த உடல் கேமரா திட்டத்தைச் செயல்படுத்த இந்த நிதி உதவியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்ளும் பணிகளில் உடல் கேமராக்கள் முக்கியப் பங்கு வகிக்கும். சம்பவ இடங்களில் நடைபெறும் விசாரணைகளைப் பதிவு செய்வதுடன், விலங்குகள் மீதான கொடுமை வழக்குகளில் நீதிமன்றத்துக்குத் தேவையான ஆதாரங்களைச் சேகரிக்கவும் அவை உதவும்.

ஒரு மதுபானக் கடைக்குள் புகுந்து அட்டகாசம் செய்த ரக்கூன், அதன் காரணமாக இணையத்தில் பிரபலமானதுடன், விலங்குகள் பாதுகாப்புப் பணிகளுக்கும் பெரும் நிதியைப் பெற்றுத் தந்துள்ளது. ஒரே ஒரு வினோதச் சம்பவம், உள்ளூர் விலங்குகள் காப்பகத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்கான முக்கிய வாய்ப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விலங்குகள் காப்பகத்துக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகள் திரட்டப்பட்ட நிதியின் ஒரு பகுதி விலங்குகளுக்கான புதிய தங்குமிடங்கள் அமைத்தல், விளையாட்டுப் பொருட்கள் வாங்குதல், உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான வெப்பநிலைக் கட்டுப்பாட்டு வசதியுடன் கூடிய கிடங்கு அமைத்தல் போன்ற பணிகளுக்கும் ஒதுக்கப்பட உள்ளது.