°C
Air:
GOLD73,245 0.25%
SILVER84,520 0.29%
USD83.25 0.12%
EUR90.45 0.08%
GBP105.6 0.15%
பெட்ரோல் மற்றும் டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள் பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுரை
Delhi

பெட்ரோல் மற்றும் டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள் பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுரை

0 views
Text Size:

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், எரிபொருள் பயன்பாட்டை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் அறிவுறுத்தியுள்ளார். நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெரும்பாலான எரிபொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்காக அதிக அளவில் அன்னிய செலவாணி பயன்படுத்தப்படுவதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. மக்கள் சேமிக்கும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலும் நாட்டின் அன்னிய செலவாணி சேமிப்புக்கு உதவியாக இருக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

சமீபத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. சில அறிக்கைகளின் படி மே மாதம் 15 ஆம் தேதிக்குள் லிட்டருக்கு 4 முதல் 5 ரூபாய் வரை விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வாகன ஓட்டிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், சிக்கனமான பயண முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்துவது, ஒரே வாகனத்தில் பலர் சேர்ந்து பயணம் செய்வது போன்ற நடைமுறைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா காலத்தில் மக்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வது, ஆன்லைன் கூட்டங்கள் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் போன்ற முறைகளுக்கு பழகியிருந்ததை பிரதமர் நினைவுபடுத்தினார். அதேபோல் தற்போது தேவையற்ற எரிபொருள் செலவை குறைக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளை அதிகமாக பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தங்கம் வாங்குவது குறித்தும் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் தேவையற்ற செலவுகளை தவிர்த்து சேமிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், முக்கிய தேவைகளுக்கு மட்டுமே பணத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த மக்கள் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என பொருளாதார நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எரிபொருள் இறக்குமதி செலவை குறைப்பது நாட்டின் நிதி நிலையை சீராக வைத்திருக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், மக்கள் மத்தியில் இந்த விவகாரம் அதிக கவனத்தை பெற்றுள்ளது. எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் மாற்று வழிகள் குறித்து மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.