சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா தி ரைஸ்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின்பு, அந்த வெற்றியின் தொடர்ச்சியாக பிரம்மாண்ட பொருட்செலவில் 'புஷ்பா 2 தி ரூல்' உருவாக்கப்பட்டது. இந்த படம், கடந்த 5-ந் தேதி வெளியான பின், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அசத்தலாக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார், மேலும் சாம் சி எஸ் பின்னணி இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பல மொழிகளில் பான் இந்தியா படம் ஆக வெளியான 'புஷ்பா 2', அதன் முதல் நாளிலிருந்து தான் சாதனை படைத்து வருகிறது.
6 நாட்களில் ரூ.1002 கோடி வசூல் செய்த 'புஷ்பா 2', இந்திய அளவில் அதிவேகமாக இந்த சாதனையை எட்டியுள்ள படம் எனக் கூறப்பட்டது. 14 நாட்களில் ரூ.1508 கோடி வசூல் செய்த இப்படம் தற்போது 21 நாட்களில் ரூ.1705 கோடி வசூல் செய்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த படம், ‘கே ஜி எப் 2’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ போன்ற படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்துவிட்டு, அடுத்தபடியாக ‘பாகுபலி 2’ படத்தின் வசூல் சாதனையை முறியடிக்குமா? என எதிர்பார்ப்பு நிலவுகிறது.


